- ஈரோடு டாக்டர் நாகராஜன் சொல்வதை கேளுங்கள்.
ஈரோட்டில் சமீபத்தில் நடந்த பில்டு எக்ஸ்போ 2019 கண்காட்சியை காண பார்வையாளராக வந்து, முதுமை என்பதை மறந்து, ஒவ்வொரு அரங்கிலும் சென்று, தொழில்நுட்பம், செய்முறை, பயன்படுத்தும் விதம் என அத்தனை விவரங்களையும் ஆர்வமாக கேட்டு, கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டுக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்.
ஆச்சர்யத்துடன் அவரை அணுகி, விசாரித்த போது…
அவர் ஈரோட்டில் பிரபலமான பாம்புக்கடிக்கு மருத்துவர், 90 வயதான டாக்டர் நாகராஜன் என அறிந்தோம்.
“டாக்டர், ஏன் கட்டுமானத்துறை கண்காட்சியை பார்க்க வந்தீர்கள்” என்று அவரிடம் வில்லங்கமாக கேட்டோம்
“வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். எங்கு கண்காட்சி நடந்தாலும் நான் பார்வையாளராக போய்விடுவேன். பொழுதை வீணாக்காமல் கண்காட்சிகளுக்கு சென்று நுட்பங்களையும், துறை சார்ந்த வளர்ச்சிகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது சில நேரங்களில் எனக்கும், பல நேரங்களில் பலருக்கும் உதவுகிறது.” என்றார்.
இதுபோல கட்டுமான கண்காட்சிகளை பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறியாளர்கள் கூட்டம் இக்கண்காட்சியில் மிக குறைவாகவே இருந்தது. இது பற்றி அவரிடம் கேட்ட போது
"கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் எங்கு சென்றாலும் கற்றுக்கொள்வார்கள். விரும்பாதவர்கள் புத்தரே வந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று திரு நாகராஜன் அவர்கள் சொல்லும் பொழுது அர்த்தம் மிகுந்ததாக இருந்தது.
இத்தனை வயதிலும் அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமுள்ள ஒரு மனிதரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.